சிக்கல், நாகூரில் பலத்த மழை


சிக்கல், நாகூரில் பலத்த மழை
x

சிக்கல், நாகூரில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

சிக்கல், நாகூரில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையைக் கடந்துவிட்ட போதிலும், தொடர்ந்து 3 நாட்களுக்கு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து மதியத்தில் சில இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகை அருகே சிக்கல், பொரவச்சேரி, சங்கமங்கலம், பெருங்கடம்பனூர், ராமர்மடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது.

சாலையில் தண்ணீர் ஓடியது

இந்த மழை காரணமாக நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி, வாகனத்தில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த மழை பெரிதும் உதவியாக இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கீழ்வேளூர், தேவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழையின்றி வாகனம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

நாகூர்

இதேபோல் நாகையை அடுத்த நாகூரில் நேற்று காலை முதல் குளிர்ந்த காற்று வீசியது. மதியம் பெய்ய தொடங்கிய மழை 1 மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தெத்தி, முட்டம், மேலநாகூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது.

கீழ்வேளூர், கூத்தூர், குருக்கத்தி, நீலப்பாடி, குருமணாங்குடி, ஒர்குடி, ஆனைமங்கலம், அகரகடம்பனூர், ஆழியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.


Next Story