தென்னை மரங்கள்- வாழைகள் சாய்ந்தன
பொங்கலூரில் நேற்று முன் தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஏராளமான தென்னை, வாழை மற்றும் பப்பாளி மரங்கள் சேதமடைந்தன.மின் கம்பங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
பலத்த காற்றுடன் மழை
தற்போது அக்னி வெயில் கடுமையான அளவில் சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சுமார் 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்று வீசியது. அதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.
பொங்கலூர், தேவணம்பாளையம், ராமம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அதுபோல் வாழை மரங்கள், பப்பாளி உள்பட பல்வேறு மரங்கள் சூறாவளி காற்றில் சிக்கி சின்னாபின்னமானது. மேலும் பல்வேறு வீடுகளில் வேயப்பட்டிருந்த மேற்கூரை சிமெண்டு சீட்டுகள் காற்றில் பறந்தன.
மின் கம்பங்கள் முறிந்தது
பொங்கலூர் ஏ.எல்.ஆர் லே-அவுட் பகுதியில் ஒரு வீட்டின் மேற்கூரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பறந்து போய் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பலத்த காற்றால் பொங்கலூர் பகுதியில் பல இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பெரும் அவதிப்பட்டனர்.
உடனடியாக சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்குச் சென்ற மின் வாரிய அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். நேற்று காலை முதல் படிப்படியாக ஒவ்வொரு பகுதியிலும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இந்த சூறாவளிக்காற்றில் தென்னை, வாழை, பப்பாளி ஆகியவை சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு இது குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.