லாரி-கார் மோதல்; இளம்பெண் பலி
கடையநல்லூர் அருகே டேங்கர் லாரி-கார் மோதிக் கொண்ட விபத்தில் இளம்பெண் பலியானார். அவரது கணவர், குழந்தைகள் காயம் அடைந்தனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே டேங்கர் லாரி-கார் மோதிக் கொண்ட விபத்தில் இளம்பெண் பலியானார். அவரது கணவர், குழந்தைகள் காயம் அடைந்தனர்.
இளம்பெண்
விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் யாதவர் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சந்தான நல்ல ஜெகன் சிவா (வயது 33). இவரது மனைவி பிரியா (27). இவர்களுக்கு ராகவன் என்ற முகிலன் (4), வெற்றிவேல் நவீன் பாரதி (4) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சந்தான நல்ல ஜெகன் சிவா தனது மனைவி, குழந்தைகளுடன் நேற்று முன்தினம் காரில் தென்காசிக்கு புறப்பட்டனர்.
பலி
கடையநல்லூர் அருகே மங்களாபுரம் பகுதியில் உள்ள வளைவில் கார் திரும்பியபோது, அந்த வழியாக தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் டேங்கர் லாரியும், காரும் மோதிக் கொண்டன. இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக கடையநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பிரியா பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சந்தான நல்ல ஜெகன் சிவா மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேங்கர் லாரியை ஓட்டி வந்த வேம்பநல்லூர் அண்ணா காலனி 1-வது தெருவை சேர்ந்த குமார் (39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.