அரசு ஜீப் மீது லாரி மோதல்; டிரைவர் உடல் நசுங்கி சாவு


அரசு ஜீப் மீது லாரி மோதல்; டிரைவர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 12 April 2023 7:00 PM GMT (Updated: 12 April 2023 7:00 PM GMT)

தேனி அருகே அரசு ஜீப் மீது லாரி மோதியதில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார். வட்டார வளர்ச்சி அதிகாரி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

தேனி

வட்டார வளர்ச்சி அதிகாரி

தேனி மாவட்டம் போடி வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றுபவர் ஞானதிருப்பதி (வயது 52). இவர் தேனியில் வசித்து வருகிறார். அதே அலுவலகத்தில், தேனி அருகே கிருஷ்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்த முகமது ஷெரீப் (49) என்பவர், வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை தேனியில் இருந்து ஜீப்பில் ஞானதிருப்பதி போடி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று கொண்டு இருந்தார். ஜீப்பை முகமது ஷெரீப் ஓட்டிச் சென்றார்.

டிரைவர் பலி

தேனி-போடி சாலையில் தோப்புப்பட்டி அருகில் சென்ற போது, எதிரே கேரள மாநிலம் மூணாறில் இருந்து தேனி நோக்கி ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி, ஜீப் மீது மோதியது. இதில் ஜீப்பின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் முகமது ஷெரீப் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். ஞானதிருப்பதி பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

படுகாயங்களுடன் கிடந்த ஞானதிருப்பதியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான முகமது ஷெரீப் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான பெரியகுளம் வடகரையை சேர்ந்த பிரின்ஸ் சக்கரவர்த்தி (27) மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த விபத்தில் முகமது ஷெரீப் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியிலும், அரசு ஊழியர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story