மயிலம் அருகேலாரிகள் மோதல்; சிறுவன் பலி


மயிலம் அருகேலாரிகள் மோதல்; சிறுவன் பலி
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

விழுப்புரம்

மயிலம்,

லாரிகள் மோதல்

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சாகாமஸ்ஜித் (வயது 45). டிரைவரான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு லாரியில் தனது மகன் அப்சல்ரகுமானுடன் (11) சென்னையில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்டார். அந்த லாரி நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த செண்டூர் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அப்சல்ரகுமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பலத்த காயமடைந்த சாகாமஸ்ஜித்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் தந்தை கண் எதிரே மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story