மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கொத்தனார் பலி
வில்லுக்குறியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கொத்தனார் பரிதாபமாக பலியானார்.
திங்கள்சந்தை:
வில்லுக்குறியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கொத்தனார் பரிதாபமாக பலியானார்.
கொத்தனார்
இரணியல் அருகே உள்ள அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் நேசமணி. இவருடைய மகன் ஜெரின் (வயது 31), கொத்தனார். அழகியமண்டபம் பிலாங்காலை பூஞ்சான்விளையைச் சேர்ந்தவர் வர்கீஸ் மகன் ஜெபிஷன் (24). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.
சம்பவத்தன்று மதியம் நண்பர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜெபிஷன் ஓட்டினார். ஜெரின் பின்னால் அமர்ந்திருந்தார்.
லாரி மோதியது
அவர்கள் தோட்டியோடு அருகே வில்லுக்குறி பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற பஸ்சை ஜெபிஷன் முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிரே பார்சல் ஏற்றி வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெரின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெபிஷனுக்கு தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெரினின் உறவினர் சிசில் தங்கம் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.