டிராக்டர் மீது லாரி மோதல்; தொழிலாளி பலி
மயிலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானாா்.
மயிலம்:
மேல்மருவத்தூரில் இருந்து கட்டைகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி டிராக்டர் புறப்பட்டது. இந்த டிராக்டரை விழுப்புரம் அருகே உள்ள மேலகொந்தை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டினார். இவருடன் 6 தொழிலாளர்கள் இருந்தனர். மயிலம் அருகே கேணிப்பட்டில் சென்றபோது சென்னையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மேஜை, நாற்காலி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த லாரி, முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதியது. இதில் கட்டைகள் அனைத்தும் சரிந்து விழுந்தது. மேலும் லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் வந்த தொழிலாளியான மேலகொந்தை கிராமத்தை சேர்ந்த ரஜினி(வயது 47) உயிரிழந்தார். மேலும் சக்திவேல், சதீஷ், வெங்கடேஷ், ராஜ்குமார், திருநாவுக்கரசு, சரத்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் விரைந்து சென்று ரஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான 2 வாகனங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.