லாரி டிரைவர் வெட்டிக்கொலை
ராஜபாளையம் அருகே சொத்துத்தகராறில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சொத்துத்தகராறில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சொத்து பிரச்சினை
தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் முருகன் (வயது 40). இவர் ராஜபாளையம் அருகே லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். தற்போது சேத்தூர் அருகே உள்ள ஜீவா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
முத்துசாமிக்கு 2 மனைவிகள் உள்ளனர். முத்துசாமியின் முதல் மனைவியின் மகன் முருகன். 2-வது மனைவியின் மகன்கள் ஞான குருசாமி (36), காளிதாஸ் (33). இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் சம்பந்தமாக இவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அண்ணன் வெட்டிக்கொலை
இந்தநிலையில் ஞான குருசாமி, காளிதாஸ் ஆகிய 2 பேரும் அண்ணன் முருகன் மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை ஜீவா நகர் பகுதி வழியாக சைக்கிளில் தனது குழந்தை மற்றும் மனைவியுடன் வந்து கொண்டு இருந்த முருகனை அவர்கள் வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் முருகனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தம்பி கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் அரிவாளுடன் நின்று கொண்டு இருந்த ஞான குருசாமியை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய காளிதாசை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து பிரச்சினைக்காக அண்ணனை, தம்பிகள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.