கார் மோதி லாரி டிரைவர் சாவு
கார் மோதி லாரி டிரைவர் உயிரிழந்தார்
அம்மாப்பேட்டை
அம்மாப்பேட்டை அருகே உள்ள உத்தமர்குடி கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 46). இவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு கலவை ஆலையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரிலிருந்து தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் உத்தமர்குடி வந்து கொண்டிருந்தார். நல்ல வன்னியன் குடிகாடு கிராமம், பூண்டி பஸ் நிறுத்தம் திருப்பம் அருகே அவர் வந்தபோது எதிரே வந்த கார், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கருணாகரனின் மனைவி இந்திரா கொடுத்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கும்பகோணம் பலவத்தான்கட்டளை, குறிஞ்சி நகரை சேர்ந்த முகமது சரீபு மகன் அரபாத்தை(27)தேடி வருகின்றனர்.