தக்கலை அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது லாரி மோதி வாலிபர் பலியானார்.
தக்கலை
தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது லாரி மோதி வாலிபர் பலியானார்.
நகைக்கடை ஊழியர்
தக்கலை பனவிளை பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது 50). இவருடைய கணவர் நாகூர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மற்ற 2 பேரும் இரட்டையர்களாக பிறந்தவர்கள்.
இதில் ஒருவர் பாபு உசைன் (வயது 20). இவர் சென்னையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் பாபு உசைன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
லாரி மோதி சாவு
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கி புறப்பட்டார். சுவாமியார் மடத்தை கடந்து காட்டாத்துறை கால்நடை மருத்துவமனை அருகே சென்றடைந்த போது எதிரே ஒரு லாரி வந்தது.
அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பாபு உசைன் தலையில் பலத்த காயமடைந்து அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.