வறண்டு கிடக்கும் 6 குளங்கள்
உடுமலை அருகே பி.ஏ.பி.ஏழுகுளம் பாசனப்பகுதியில் 6 குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. அந்த குளங்களில் ஆடு, மாடுகள் மேய்கின்றன.
குளங்கள்
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை வரை உள்ள பகுதிகளில் ஏழுகுளம் பாசனம் என்றுஅழைக்கப்படும் பகுதிகளில் தினைக்குளம், செட்டிகுளம், செங்குளம், கரிசல்குளம், அம்மாபட்டிகுளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் மற்றும் வளையபாளையம் குளம் ஆகிய 8 குளங்கள் உள்ளன. இந்த குளங்களையடுத்து ஆலாம்பாளையம் பகுதியில் பூசாரி நாயக்கன் குளம் உள்ளது.
பழைய ஆயக்கட்டு பாசனம்
பரம்பிக்குளம் ஆழியாறுபாசனத்திட்டத்தில் (பி.ஏ.பி.), உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக இந்த 8 குளங்கள் மற்றும் பூசாரிநாயக்கன்குளத்திற்கு தண்ணீர் வினி யோகிக்கப்பட்டு வருகிறது.
பி.ஏ.பி.2-ம்மண்டல பாசனப்பகுதிகளுக்கு அரசாணைப்படி கடந்த மாதம் (ஆகஸ்டு) 26-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இந்த ஏழுகுளம் பாசனப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் பூசாரி நாயக்கன் குளம் ஆகிய குளங்களுக்கு இன்னும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இந்த பாசனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்ததாலும், குளங்களில் இருப்புஇருந்த தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தி வந்ததாலும், அதனால் பாசனப்பகுதி நிலங்களில் ஓரளவு ஈரப்பதம் இருப்பதாலும், தங்களுக்கு தேவையான போது தண்ணீர் கேட்டுக்கொள்ளலாம் என்று இந்த குளங்களுக்குட்பட்ட பாசனப்பகுதியில் உள்ள விவசாயிகள் கருதி, இதுவரை கேட்காததாலும் இந்த குளங்களுக்கு இன்னும் தண்ணீர்திறந்துவிடப்படவில்லை.
வறண்டு கிடக்கும் குளங்கள்
இந்த நிலையில் இந்த குளங்களில் இருந்த தண்ணீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு விட்டதைத்தொடர்ந்து செங்குளம், செட்டிகுளம், கரிசல்குளம், தினைக்குளம், அம்மாபட்டி குளம், மற்றும் பூசாரி நாயக்கன்குளம் ஆகிய 6 குளங்களில் தற்போது தண்ணீர் இல்லை. அதனால் இந்த குளங்கள் வறண்ட நிலையில் உள்ளன.
இந்த குளங்களில் ஆங்காங்கு செடிகள் வளர்ந்துள்ளன.அந்த பகுதியில் தற்போது ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்ந்து வருகின்றன.மீதி குளங்களில் சிறிதளவு மட்டும் தண்ணீர் உள்ளது.
தற்போது இந்த குளங்களில் இருப்பு உள்ள தண்ணீர் மூலம் இந்த பகுதியில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதுகுறித்து பி.ஏ.பி.பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த குளங்களுக்கு தண்ணீர் விட அரசாணை பெறப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் கேட்கும்போது இந்த குளங்களுக்கு தண்ணீர் விடப்படும் என்றனர்.