டாஸ்மாக்கில் நல்ல நிர்வாகத்தை கொண்டு வர முயற்சியுங்கள் அரசுக்கு, கு.பாலசுப்பிரமணியன் வேண்டுகோள்


டாஸ்மாக்கில் நல்ல நிர்வாகத்தை கொண்டு வர முயற்சியுங்கள் அரசுக்கு, கு.பாலசுப்பிரமணியன் வேண்டுகோள்
x

டாஸ்மாக்கில் நல்ல நிர்வாகத்தை கொண்டு வர முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று அரசுக்கு, கு.பாலசுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதனால் மதுவிலக்கு துறைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பதிலாக, தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள குறைகளை போக்கி, நல்ல நிர்வாகத்தை கொண்டு வர முயற்சிகள் எடுக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில், அவரை சந்தித்து மனு அளித்த போது, நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், அரசுக்கு என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்றும் விவாதிக்கப்பட்டது. அப்போது நாங்கள், டாஸ்மாக் பணியாளர்களுக்கு இருக்கக்கூடிய சிரமங்கள் குறித்து தெளிவாக கூறினோம்.

செலவின கோரிக்கை

ஒரு டாஸ்மாக் கடையை நடத்துவதற்கு பணியாளர்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற செலவுகள் உள்ளன. இதை உடனடியாக தடுக்க வேண்டும். அதாவது மின்சார கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை நிர்வாகம் ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு செலுத்தும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இவை சரி செய்யப்பட்டால், பணியாளர்களிடையே இருக்கும் சிறுசிறு குறைகளை போக்குவதற்கு தொழிற்சங்கங்கள் தயாராக உள்ளன. எனவே பணியாளர்களுக்கு நிர்வாகம் செய்யக்கூடிய அனைத்து விதமான செலவின கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் அல்லிமுத்து, செயலாளர் பாலமுருகன், மாவட்ட அமைப்பு செயலாளர் காமராஜ், மாவட்ட துணை தலைவர்கள் ரூபன், ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story