நெய்வேலி அருகேவாலிபர் மீது டீசலை ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி; 3 பேர் கைது
நெய்வேலி அருகே வாலிபர் மீது டீசலை ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலி அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன்கள் பாண்டித்துரை (வயது 30), பாக்கியராஜ்(33). அண்ணன்-தம்பியான இருவரும் விவசாய பணிக்காக டிராக்டருக்கு டீசல் வாங்கி கொண்டு நெய்வேலியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அருகே வந்தபோது, காப்பான்குளத்தை சேர்ந்த சின்னதுரை மகன் ராகுல் என்கிற தங்கதுரை(23), ரவிச்சந்திரன் மகன் ஸ்டாலின் (22), ரவி மகன் குட்டி என்கிற சஞ்சய் ஆகியோர் அண்ணன்-தம்பி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து, அவர்களிடம் 500 ரூபாய் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அதற்கு பாக்கியராஜ் தங்களிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் கேனுடன் மோட்டார் சைக்கிளில் இருந்த டீசலை பாக்கியராஜ் மீது ஊற்றி தீவைக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வாகனங்களில் சிலர் வந்ததால், தங்கதுரை உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் வழக்குப்பதிந்து தங்கதுரை உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.