ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துமூதாட்டி தீக்குளிக்க முயற்சிதிண்டிவனம் அருகே பரபரப்பு


ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துமூதாட்டி தீக்குளிக்க முயற்சிதிண்டிவனம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:45 PM GMT)

திண்டிவனம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே மயிலம் ஒன்றியம் அகூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு இடம் சுமார் 2 ½ ஏக்கரை நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்த 5 பேர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்றிக் கொள்ளுமாறு அந்த 5 பேருக்கு 6 முறை நோட்டீசு கொடுத்தது. இருப்பினும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளவில்லை.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில் ரோசணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதைபார்த்து ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது ஆக்கிரமிப்பாளர்களின் குடும்பத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் திடீரென மண்எண்ணெயை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த போலீசார் அந்த மூதாட்டியை மீட்டதோடு, ஆக்கிரமிப்பாளர்களை சமாதானப்படுத்தி தகுந்த அறிவுரை வழங்கினர். இதையடுத்து அங்கு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story