தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினம்:மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி


தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி

கடந்த 2004 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷிய கடற்பரப்பில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது. அதன் தாக்கத்தால் பல்வேறு நாடுகளின் கடலோரப் பகுதிகளை சுனாமி என்னும் ஆழிப்பேரலை அழித்துச் சென்றது. இதில் தமிழகத்தில் ஏராளமான உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. அந்த சுனாமி தாக்கிய 18-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

அஞ்சலி

இதனை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சங்குகுளி மீனவர்கள் சங்க இசக்கிமுத்து தலைமை தாங்கினார். தொடர்ந்து மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்று இனிகோநகர் பகுதியில் மீனவம் காப்போம் இயக்கம் சார்பில் சுனாமி அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை பொறுப்பாளர் நிக்சன் தலைமை தாங்கினார். ஜேம்ஸ் பர்னாந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மீனவம் காப்போம் இயக்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story