மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல்- டி.டி.வி. தினகரன்
மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் என டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
நன்னிலம்:-
மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் என டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
டி.டி.வி. தினகரன் பேட்டி
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சனாதனம் குறித்து ஆன்மிகத்தில் உள்ளவர்களுக்கே தெளிவாக தெரியாது. அரசியல்வாதிகளும் அதைப்பற்றி பேசுவதை தவிர்க்கின்றனர். எனவே கவர்னர் சனாதனம் குறித்து பேசியிருக்க கூடாது. சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலாவுக்கு இடம் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். அதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
திராவிட மாடல்
தி.மு.க. அனைவருக்குமே எதிராக செயல்படுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்படுகிறது. தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தி.மு.க. ஏமாற்றி வருகிறது. இதே போல மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல்.
இது போன்ற செயல்கள் திராவிடர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. கடந்த 2 மாதங்களில் 2 'லாக்கப்' மரணங்கள் நடைபெற்றுள்ளன. முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. வெற்று திட்டங்களை அறிவிக்காமல் காவல்துறையை சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு ஆட்சிக்கு ஆபத்து வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.