தூத்துக்குடியில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய காசநோய் கண்டறியும் வாகனம்


தூத்துக்குடியில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய காசநோய் கண்டறியும் வாகனம்
x

தூத்துக்குடியில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய காசநோய் கண்டறியும் வாகனத்தை கனிமொழி எம்.பி.கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய காசநோய் கண்டறியும் வாகனத்தை கனிமொழி எம்.பி. நேற்று தொடங்கி வைத்தார்.

காசநோய்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உயர்தர கருவிகள் மூலம் காசநோய் கண்டறியப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசின் காசநோய் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.46 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வாகனம்

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கான வாகனத்தின் சேவை தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி ஸ்டேட்வங்கி காலனி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு காசநோய் கண்டறியும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனம் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற குடிசைப்பகுதி மக்கள், தொழிற்சாலை பணியாளர்கள், காசநோயின் தாக்கம் அதிக உள்ள பகுதிகளில் வாழ்பவர்கள், எச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளானவர்கள், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு மக்களை தேடி சென்று எக்ஸ்ரே பரிசோதனை மூலம் காசநோய் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. தொடர்ச்சியான இருமல், சளி உடையவர்கள், சர்க்கரை நோயாளிகள் நோய் தடுப்பு சக்தி குறைந்தவர்கள், அதிக இட நெருக்கடியில் வசிப்பவர்கள், புகை பிடிப்பவர்கள், குடிபோதைக்கு ஆட்பட்டோர் மற்றும் எளிதில் காசநோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும் போது பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முருகவேல், சுகாதார பணிகள் துணை இயக்குனர் (காசநோய்) சுந்தரலிங்கம், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், மாநகர நல அலுவலர் அருண்குமார், மாநகர வடக்கு மண்டல உதவி ஆணையாளர் தனசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story