இழுவை, மிதவை கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன
பாம்பன் கடல் பகுதியில் 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இழுவை மற்றும் மிதவை கப்பல்கள் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.
ராமேசுவரம்,
பாம்பன் கடல் பகுதியில் 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இழுவை மற்றும் மிதவை கப்பல்கள் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.
3 நாட்களாக நிறுத்தி வைப்பு
மும்பையில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்வதற்காக மிதவை கப்பல்களை இழுத்தபடி இழுவை கப்பல்கள் வந்தன. பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக பாம்பன் குருசடை தீவு கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக அந்த கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதை தொடர்ந்து நேற்று துறைமுக அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதன்பேரில் பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து 20 மீட்டர் நீளமும், 150 டன் எடையும் கொண்ட இழுவை கப்பல் ஒன்று, சுமார் 600 டன் எடை கொண்ட பெரிய மிதவையை இழுத்தபடி தூக்குப்பாலத்தை கடந்து சென்றது.
கடந்து சென்றன
தொடர்ந்து மற்றொரு மிதவை கப்பலும் மிதவையை இழுத்தபடி தூக்குப் பாலத்தை கடந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா நோக்கி சென்றது. இதேபோல் மும்பையில் இருந்து சென்னை செல்வதற்காக வந்த இழுவை கப்பல் ஒன்றும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது. உள்ளூரைச் சேர்ந்த சில மீன்பிடி விசைப்படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன. ஒரே நேரத்தில் இழுவை மற்றும் மிதவை கப்பல்கள் தூக்குப்பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.