ஆமை வேகத்தில் நடக்கும் சுரங்கப்பாதை பணி
திண்டுக்கல்-கரூர் சாலையில் ரெயில்வே சுரங்ப்பாதை பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. அந்த பணி விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கிராமங்கள், நகரங்களில் வசிக்கும் மக்கள் வெளியூர் செல்வதற்கு பஸ், ரெயில் சேவையை தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதில் பஸ் போக்குவரத்துக்காக கிராமங்கள், நகரங்களில் முக்கிய இடங்களில் தனித்தனி மார்க்கமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ரெயில் போக்குவரத்துக்கும் தனித்தனி வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சில சாலைகளில் நகருக்கு உள்ளேயே குறுக்காக ரெயில் பாதைகள் செல்கின்றன.
கிராமங்களை பொறுத்தவரை ரெயில் பாதையும், சாலையும் இணையும் இடத்தில் சில இடங்களில் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் ஆளில்லா ரெயில்வே கேட்டாக இருக்கும். நகர்ப்புறங்களில் அனைத்து இடங்களிலும் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வழியாக ரெயில்கள் வரும் சமயத்தில் ரெயில்வே கேட் மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை தடுக்க மேம்பாலம், ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுகின்றன.
ரெயில்வே மேம்பாலம்
ஆனால் சில இடங்களில் ரெயில்வே பாதையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள சாலையை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.
அதன்படி திண்டுக்கல்-சேலம், திண்டுக்கல்-திருச்சி, திண்டுக்கல்-கரூர் ஆகிய சாலைகளின் குறுக்காக ரெயில் பாதைகள் செல்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 3 சாலைகளிலும் ரெயில்வே கேட் மூடப்படும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல்-திருச்சி, திண்டுக்கல்-சேலம் ஆகிய சாலைகளில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டன.
மேலும் திண்டுக்கல்-திருச்சி சாலையும், திண்டுக்கல்- கரூர் சாலையும் நேருஜிநகரில் இருந்து பிரிந்து செல்கின்றன. அந்த 2 சாலைகளிலும் மிக அருகே ரெயில்வே கேட்டுகள் இருந்தன. இதனால் திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலமும், கரூர் சாலையில் சுரங்கப்பாதையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.
கரூர் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ரெயில்வே சுரங்கப்பாதை ரூ.17 கோடியே 45 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடந்ததால் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை சுரங்கப்பாதை பணிகள் நிறைவடையவில்லை.
குளமாக மாறும் சுரங்கப்பாதை
அதேநேரம் ரெயில்வே நிர்வாகம் சார்பில் தண்டவாளத்தில் இருபக்கங்களிலும் சிமெண்டு சுவர்கள் எழுப்பப்பட்டு சுரங்கப்பாதை பணிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தண்டவாளத்தில் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சுரங்கப்பாதை தரைமட்டத்தில் இருந்து சுமார் 20 அடி ஆழத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சாரல் மழை பெய்தால் கூட சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி குளம்போல் மாறிவிடுகிறது.
மேலும் கரூர் சாலையில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ் போக்குவரத்து தடைப்பட்டு விட்டது. எம்.வி.எம்.நகர், கூட்டுறவுநகர், பெஸ்கி கல்லூரி, ஆயில்மில் பகுதிகளை சேர்ந்த மக்கள் பஸ்சுக்காக 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. கரூர் சாலையில் கலை கல்லூரி, பொறியியல், பாலிடெக்னிக், நர்சிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
விடிவுகாலம் பிறக்குமா?
ஆனால் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடையாததால் இந்த கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் எம்.வி.எம்.நகர், கூட்டுநகர் பகுதி மக்கள் என்.ஜி.ஓ. காலனி வழியாக திருச்சி சாலைக்கு வந்து பிற பகுதிகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. அதேபோல் கரூர் சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் இல்லாததால் ஓட்டல், டீக்கடை, மளிகை உள்பட பல்வேறு வகையான கடைகளில் வியாபாரம் இல்லாமல் மூடப்பட்டுவிட்டன. இதனால் தற்போது அந்த பகுதியே தனித்தீவு போல் மாறிக்கிடக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் சுரங்கப்பாதை பணிகள் எப்போது முடியும். தங்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
3 மாதங்களில் நிறைவடையும்
இதுகுறித்து சுரங்கப்பாதை திட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சுரங்கப்பாதை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் அப்போதே 70 சதவீதத்துக்கு மேல் பணிகள் நிறைவடைந்துவிட்டன. அதன் பிறகு நிலம் கையகப்படுத்தப்பட்டதையடுத்து எஞ்சியுள்ள பணிகளை முடிக்க மீண்டும் டெண்டர் விடப்பட்டு ரூ.2 கோடியில் அந்த பணிகளை முடிப்பதற்கு ஒப்பந்ததாரர்களும் நியமிக்கப்பட்டுவிட்டனர். இம்மாத இறுதியில் மீண்டும் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் தொடங்கும். அனைத்து பணிகளும் இன்னும் 3 மாதங்களில் நிறைவு செய்யப்பட்டுவிடும் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்றனர்.
சுரங்கப்பாதை பணிகள் குறித்து வியாபாரி தங்கபாண்டியன் கூறுகையில், சுரங்கப்பாதை அமைப்பதற்கு முன்பு வரை இந்த பகுதியில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் கடை வைத்திருந்தனர். ரெயில் வரும் சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் யாருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படவில்லை. ஆனால் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது ஒருசிலரே சுரங்கப்பாதை அருகில் கடை வைத்துள்ளனர். சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்தாலும் இப்பகுதி பழைய நிலைக்கு வர சில ஆண்டுகள் ஆகும். ஆனாலும் விடியல் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் காத்திருக்கிறோம் என்றார்.