மன்னார்குடி பகுதியில் அறுவடைக்கு தயாரான மஞ்சள் கொத்துகள்
பொங்கல் பண்டிகைக்காக மன்னார்குடி பகுதியில் மஞ்சள் கொத்துகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
மன்னார்குடி,
பொங்கல் பண்டிகைக்காக மன்னார்குடி பகுதியில் மஞ்சள் கொத்துகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றாலே மஞ்சள், கரும்பு, வாழைப்பழம் ஆகியவையே கண் முன் உடனடியாக வந்து நிற்கும். புது பானையில் அரிசி இட்டு, பானைக்கு மஞ்சள் கொத்து கட்டி திருநீறு பூசி பொங்கல் வைத்து சூரியனுக்கு வழிபாடு செய்வது தமிழர்களுடைய பண்பாடாகும்.
மஞ்சள் இன்றி எந்த நற்காரியங்களையும் தமிழர்கள் தொடங்குவதில்லை. பொங்கலுக்கு மஞ்சள் மட்டும் தனியாக இல்லாமல் மஞ்சள் செடியுடனே அதை பானைக்கு கட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது சிறப்பான ஒன்றாகும்.
மஞ்சள் சாகுபடி
சிலர் மஞ்சலுக்கு பதிலாக இஞ்சி கொத்தை பொங்கல் பானைக்கு கட்டுவதும் வழக்கத்தில் உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் வகையில் 6 மாதங்களுக்கு முன்பே மஞ்சளை விவசாயிகள் பயிரிடுவார்கள். அது வளர்ந்து கிழங்கு வைத்து பொங்கலுக்கு பயன்படுத்த தயாராக இருக்கும்.
அந்த வகையில் மன்னார்குடி பகுதியில் இலக்கணாம்பேட்டை, மேலநாகை, சுந்தரகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்கள் புஞ்சை நிலங்களில் மஞ்சள் செடிகளை வளர்த்து பொங்கலுக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
அறுவடைக்கு தயார்
அந்த வகையில் இந்த ஆண்டு, விவசாயிகள் தங்கள் புஞ்சை நிலங்களில் மஞ்சள் செடியை பயிரிட்டு வளர்த்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டும் இருப்பதால் இந்த மஞ்சள் கொத்துகளை அறுவடை செய்து மன்னார்குடி நகரத்தில் கொண்டு வந்து விற்பனை செய்வர். இதன் மூலம் சிறு வருமானம் கிடைப்பதுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட உதவிகரமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.