பொங்கல் பண்டிகையை முன்னிட்டுவிழுப்புரம் பகுதியில் மஞ்சள் அறுவடை தீவிரம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டுவிழுப்புரம் பகுதியில் மஞ்சள் அறுவடை தீவிரம்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையைமுன்னிட்டு விழுப்புரம் பகுதியில் மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம்


பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவில் கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவை முக்கிய இடம் பிடிக்கக்கூடியவை ஆகும்.

இதில் மங்கலப்பொருளாக விளங்கும் மஞ்சள் கிழங்கின் வாசனை, வீடு முழுவதும் மனம் வீசும் வகையிலும், பொங்கல் பானையை அலங்கரிக்கவும், பூஜையில் வைத்து வழிபடவும் மஞ்சள் கொத்து செடிகள் பயன்படுகின்றன.

மஞ்சள் அறுவடை

இதற்கென விழுப்புரம் அருகே ஆலாத்தூர், சின்னக்கள்ளிப்பட்டு, மழவந்தாங்கல், சின்னமடம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள், தங்கள் நிலங்களில் சாகுபடி செய்த மஞ்சள் பயிர் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாளே உள்ள நிலையில் தற்போது மஞ்சள் செடிகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அறுவடை செய்யப்படும் மஞ்சள் செடிகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பாதிப்பு

இதுகுறித்து ஆலாத்தூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், எங்கள் பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் பயிரிடப்படும். இங்கு அறுவடை செய்யப்படும் மஞ்சள், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். இந்த ஆண்டு பெய்த கனமழையினால் மஞ்சள் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மஞ்சள் கொத்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மஞ்சள் கொத்து செடிகளின் விலையை சற்று உயர்த்தி விற்பனை செய்தால் மட்டுமே மழையினால் ஏற்பட்ட இழப்புக்கு ஓரளவு ஈடுகட்ட முடியும். நன்கு திடமான மஞ்சள் கொத்து கடந்த ஆண்டு ரூ.15-க்கு விற்பனை செய்த நிலையில் இந்த ஆண்டு ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்தால் மட்டுமே எங்களுக்கு கட்டுப்படியாகும் என்றார்.


Next Story