தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்க பணிகள் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடையும்: கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்க பணிகள் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடையும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் அடுத்த ஆண்டு (2023) மே மாதம் முடிவடையும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
பயிற்சி பட்டறை
தூத்துக்குடியில் தனியார் ஓட்டலில் ஒரு முனை தீர்வு மையம் இணையதள பயன்பாடு குறித்த பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சாவ் கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதியில் ஏராளமான சிறு, குறு தொழில் முனைவோர்கள் உள்ளனர். இதனை அதிகப்படுத்த வேண்டும். ஏனென்றால் ஏராளமானோர் வேலை கேட்டு வந்து கொண்டிருக்கின்றனர். சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விரிவாக்கம்
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் முடிவடையும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. அதே போன்று நாகப்பட்டினம் - கன்னியாகுமரி வரையிலான பசுமை கிழக்கு கடற்கரை சாலை தூத்துக்குடி மாவட்டத்தில் சூரங்குடி கிராமம் முதல் பெரியதாழை கிராமம் வரை அதிக தூரத்துக்கு செல்கிறது. இதனால் சாலை வழியாகவும் மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கு வசதியாக உள்ளது. அதே போன்று மணியாச்சி ரெயில் நிலையம் - சங்கரப்பேரி சாலை பணிகளும் விரைவில் நிறைவடையும். கோவில்பட்டியில் தொழிற்பூங்கா, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. சிறு, குறு தொழில்களை ஒற்றை சாளரமுறையினைபயன்படுத்தி மேம்படுத்த வேண்டும். தொழில் முனைவோர்களுக்கு தேவையான நிலம், மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் முனைவோர்கள் சிறு, குறு தொழில்களை தொடங்கி வேலைவாய்ப்புகளை பெருக்கி பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.