தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பலத்த காற்று எச்சரிக்கை எதிரொலியாக வியாழக்கிழமை தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி

பலத்த காற்று எச்சரிக்கை எதிரொலியாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மீன்பிடி தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 545 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

கடலுக்கு செல்ல ஆயத்தம்

இந்த 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் தடைக்காலம் நிறைவடைந்தது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு ஆயத்தமானார்கள். படகுகளில் டீசல் நிரப்பி, வலைகளை ஏற்றினர். அதேபோல் ஐஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் படகுகளில் ஏற்றி கடலுக்கு செல்ல தயாராக இருந்தனர்.

பலத்த காற்று எச்சரிக்கை

இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், எனவே, மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

2 மாதத்துக்கு பிறகு மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்த மீனவர்கள், இந்த திடீர் வானிலை அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story