தூத்துக்குடி மாவட்ட கால்பந்து போட்டி:நாசரேத் பள்ளி அணி முதலிடம்
தூத்துக்குடி மாவட்ட கால்பந்து போட்டியில் நாசரேத் பள்ளி அணி முதலிடம் பிடித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் நாசரேத் பள்ளி அணி முதலிடம் பிடித்து பரிசுக்கோப்பையை வென்றது.
கால்பந்து போட்டி
தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான செவாலியர் சி.ஐ.ஆர்.மச்சாது நூற்றாண்டு சுழற் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 14 பள்ளிக்கூடங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நேற்று மாலையில் இறுதி போட்டிகள் நடந்தன. இதில் நாசரேத் மர்காசியஸ் பள்ளி அணியும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதல் நாசரேத் மர்காசியஸ் பள்ளி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
பரிசளிப்பு விழா
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா மாலையில் நடந்தது. விழாவுக்கு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க முன்னாள் தலைவர் ஜோபிரகாஷ், தொழில் அதிபர் பின்டோ வில்லவராயர், புனித லசால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் பால் ஆகியோர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். விழாவில் செவாலியர் சி.ஐ.ஆர். மச்சாது குடும்பத்தை சார்ந்த நவீன் மச்சாது, இமானுவேல் மச்சாது, ஜோயல் மச்சாது, தூத்துக்குடி மாவட்ட கால்பந்தாட்ட கழக தலைவர் சேசைய வில்லவராயர், செயலாளர் லூர்து பீரிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.