தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 97.3 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி


தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 97.3 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
x

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 97.3 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் 97.36 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-2

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. முன்பு அனைத்து தேர்வு முடிவுகளும் முதன்மை கல்வி அலுவலகம் மூலம், பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கூடங்களில் இணைக்கப்பட்டு உள்ள மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று காலையில் அனைத்து மாணவர்களுக்கும், செல்போன் மூலம் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை மாணவர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அதே போன்று தனது நண்பர்களையும் தொடர்பு கொண்டு மதிப்பெண்களை பரிமாறிக் கொண்டனர். அதன்பிறகே கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு விவரங்கள் தெரியவந்தன.

5-வது இடம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 8 ஆயிரத்து 513 மாணவர்கள், 10 ஆயிரத்து 498 மாணவிகள் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 11 பேர் எழுதினர். இதில் 8 ஆயிரத்து 196 மாணவர்கள், 10 ஆயிரத்து 313 மாணவிகள் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 509 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 97.36 சதவீதம் ஆகும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சியில் 5-வது இடத்தை எட்டிப்பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் 10-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 74 பேர் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 820 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 97.90 சதவீதம் தேர்ச்சி ஆகும். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 937 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 6 ஆயிரத்து 689 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.42 சதவீதம் ஆகும்.

மாணவர்கள் சாதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பல்வேறு பாடங்களில் மாணவ, மாணவிகள் 100 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளனர். இதில் 27 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,780 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

அதன்படி வரலாறு பாடத்தில் 29 பேரும், கணிதம் 12 பேர், இயற்பியல் 15 பேர், உயிரியல் 13 பேர், பொருளாதாரம் 56 பேர், வணிகவியல் 146 பேர், புவியியல் 9 பேர், மனையியல் 4, புள்ளியியல் 3, வேதியியல் 76, வேளாண்மை அறிவியல் (கோட்பாடு) 4, கணக்கு பதிவியல் 157, கணினி தொழில்நுட்பம் 1, கணினி அறிவியல் 151, தாவரவியல் 9, கணினி பயன்பாடு 101, அடிப்படை மெக்கானிக்கல் 24, வேளாண்மை அறிவியல் 163, வணிக கணிதம் 33, விலங்கியல் 6, அச்சுக்கலை மற்றும் கணினி 55, உணவு மேலாண்மை 13, ஆடிட்டிங் 550, அடிப்படை எலக்ட்ரிக்கல் 100, ஜவுளி மற்றும் ஆடை 11, நர்சிங் 38, நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம் பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளனர்.


Next Story