தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை திங்கட்கிழமை கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டார். புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற நவ.9-ந் தேதி வெளியாகிறது.
தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டார். புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற நவ.9-ந் தேதி வெளியாகிறது.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2023 நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி ஒரு வாக்குச் சாவடிக்கு 1,500 வாக்காளர்களை மட்டும் அனுமதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
6 புதிய சாவடி
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்தம் 6 வாக்குச்சாவடிகள் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. இதனால் விளாத்திகுளம் தொகுதியில் 260 வாக்குச் சாவடிகளும், தூத்துக்குடியில் 284-ம், திருச்செந்தூரில் 264-ம், ஸ்ரீவைகுண்டத்தில் 263-ம், ஓட்டப்பிடாரத்தில் 262-ம், கோவில்பட்டியில் 284-ம் ஆக மொத்தம் ஆயிரத்து 617 வாக்குச் சாவடிகள் உள்ளன.
வாக்காளர் பட்டியல்
மேலும் வாக்குச்சாவடி இடமாற்றம், கட்டிட மாற்றம், பெயர் மாற்றம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் தங்களது சட்டமன்ற தொகுதியின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக அரசியல் கட்சியினரின் கோரிக்கை கருத்துக்கள் பெற்று அதன் மீது நடவடிக்கை மேற் கொள்ளப்படும். வாக்குச்சாவடி மறுவரையறை பணிகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த பணியில் பெறப்பட்டு உள்ள மனுக்கள் மீதும் விசாரணை முடித்து தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 9.11.22 அன்று ளெியிடப்பட உள்ளது என்று கூறினார்.