தூத்துக்குடி மாவட்டபோலீஸ் சூப்பிரண்டுக்கு டி.ஜி.பி. பாராட்டு


தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணனுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டுதெரிவித்து வெகுமதி வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி

ஈரோடு பெருந்துறையில் பொதுமக்களிடம் ஈமு கோழிகள் மீது முதலீடு செய்யும் பணத்துக்கு அதிகமான தொகை திரும்ப கிடைக்கும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பல முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்காமல் சிலர் ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் 2012-ம் ஆண்டில் 2 வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த, தற்போதைய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் மோசடியில் ஈடுபட்ட மயில்சாமி, சக்திவேல் ஆகிய 2 பேருக்கும் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், கோவை வழக்கில் ரூ.5 கோடியே 68 லட்சத்து 48 ஆயிரம் அபராதமும், ஈரோடு வழக்கில் ரூ.28 கோடியே 72 லட்சத்து 32 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டது. அபராதத் தொகைகளை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது.

இந்த வழக்கை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையையும் பெற்றுத்தந்த போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் போலீசாரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி வழங்கினார்.


Next Story