தூத்துக்குடி டிரைவர் கொலையில்லாரி அதிபர் உள்பட 5 பேர் கைது


தூத்துக்குடி டிரைவர் கொலையில்லாரி அதிபர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி டிரைவர் கொலையில் லாரி அதிபர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி டிரைவர் கொலையில் லாரி அதிபர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

டிரைவர்

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 33). இவர் தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவர் தூத்துக்குடி ஜோதிநகர் விலக்கு பகுதியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார், இறந்த ராஜேஷ் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

லாரி அதிபர்

தூத்துக்குடி சக்திவிநாயகர்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (46). லாரி அதிபரான இவருக்கு சொந்தமான டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ராஜேஷ் கண்ணன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சிக்கு இரும்பு கம்பி லோடு ஏற்றிக் கொண்டு சென்றார். அங்கு ராஜேஷ் மது போதையில் இரும்பு கம்பிகளை குறிப்பிட்ட இடத்தில் இறக்காமல் காலம் தாழ்த்தினார்.

3½ டன் இரும்பு குறைவு

இதுகுறித்து இரும்பு கம்பிகளை வாங்குகிறவர்கள், டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சின்னத்துரையை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். உடனே சின்னத்துரை, ராஜேஷ் கண்ணனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் சின்னத்துரை, தன்னுடைய வேறு டிரைவர்கள் மூலம் லாரியில் இருந்த இரும்பு கம்பிகளை குறிப்பிட்ட இடத்தில் இறக்கி உள்ளார். அப்போது 3½ டன் இரும்பு குறைவாக இருந்தது. இதனால் ராஜேஷ் கண்ணனை கேரளாவிலேயே விட்டு வந்தனர்.

அடித்து உதைத்து...

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் கண்ணன், டிரைவர்களின் 'வாட்ஸ்-அப்' குரூப்பில், டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சின்னத்துரை பற்றியும், அவரிடம் பணியாற்றும் டிரைவர்கள் பற்றியும் அவதூறாக பேசிய ஆடியோவை அனுப்பியதாக கூறப்படுகிறது.

பின்னர் கடந்த 7-ந் தேதி கொச்சியில் இருந்து ராஜேஷ்கண்ணன் தூத்துக்குடிக்கு திரும்பி வந்தார். இதனை அறிந்த டிரைவர்களான அருப்புக்கோட்டை காந்திநகரை சேர்ந்த அஜித்குமார் (29), ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்த தங்கம் (33), தென்காசி கழுநீர்குளத்தை சேர்ந்த பூ இசக்கிமுத்து (25) பெரியசாமி ஆகியோர் சேர்ந்து ராஜேஷ் கண்ணனை புதியம்புத்தூர் அருகே கீழவேலாயுதபுரத்தில் உள்ள குடோனுக்கு அழைத்து சென்று அடித்து உதைத்து தாக்கினர்.

5 பேர் கைது

பின்னர் ராஜேஷ் கண்ணனை ஆட்டோவில் ஏற்றி சென்று, ஜோதிநகர் விலக்கு பகுதியில் போட்டு சென்றனர். இதில் பகல் முழுவதும் வெயிலில் கிடந்த அவரை மாலையில் போலீசார் பார்த்தபோது இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சின்னத்துரை, டிரைவர்களான அஜித்குமார், தங்கம், பூ இசக்கிமுத்து, பெரியசாமி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story