தூத்துக்குடியில்புதன்கிழமை முதல்மீண்டும் 15 ரேஷன்கடைகளில் தக்காளி விற்பனை


தூத்துக்குடியில்புதன்கிழமை முதல்மீண்டும் 15 ரேஷன்கடைகளில் தக்காளி விற்பனை
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்புதன்கிழமை முதல் மீண்டும் 15 ரேஷன்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று(புதன்கிழமை) முதல் மீண்டும் 15 ரேஷன்கடைகளில் தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

தக்காளி விற்பனை

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு கூட்டுறவுத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 28.06.23 முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில வாரமாக தக்காளி விலை தாறுமாறாக அதிகரித்ததால் நேற்று ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடியில் டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, அண்ணாநகர், பூபாலராயர்புரம், மில்லர்புரம், அழகேசபுரம், போல்பேட்டை, முத்தம்மாள்காலனி உள்பட 15 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இடையில் விலை சற்று குறைந்ததால் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படவில்லை. தற்போது மீண்டும் விலை உயர்ந்து இருப்பதால் ரேஷன்கடைகள் மூலம் தக்காளி விற்பனையை தொடங்க அரசு அறிவித்து உள்ளது.

25 டன்

இது குறித்து தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாட்சியர் ஜோசில்வஸ்டர் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி மற்றும் 15 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (ஜூலை) மட்டும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் 25 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டு உள்ளது. வெளிமார்க்கெட்டை விட சுமார் ரூ.50 முதல் ரூ.60 வரை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம். 15 ரேஷன் கடைகளில் 2 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ரேஷன் கடைகளில் தக்காளியை அதிக அளவில் வைப்பதற்கான வசதிகள் இல்லை. இதனால் குறைந்த அளவிலான தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர் அறிவித்தது போன்று இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் ரேஷன்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக மதுரையில் இருந்து தக்காளி வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் தரமான காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிக அளவில் வந்து வாங்கி செல்கின்றனர். தினமும் சுமார் 1000 பேர் வந்து காய்கறி வாங்குகின்றனர். மேலும் இன்று தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இன்று பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் ரூ.70-க்கு தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.


Next Story