தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்


தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

செவிலியர் தினம்

நவீன செவிலியர் துறையின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளான மே மாதம் 12-ந் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரது தன்னலமற்ற சேவையை போற்றும் விதமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் உலக செவிலியர் தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, செவிலியர் கண்காணிப்பாளர் ஹெப்சி ஜோதிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேவை

சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, செவிலியர் துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள், 35 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது, செவிலியர் பணியானது எந்த ஒரு செயலுக்கும் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு சேவை. செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினர். தொடர்ந்து நடனம், வினாடி-வினா போட்டி, கவிதை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. நிகழ்ச்சியில் அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் மெழுவர்த்தி ஏந்தியவாறு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

விழாவில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி துணை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செவிலியர்கள் ஊர்வலம்

முன்னதாக நர்சிங் கல்லூரி மாணவிகள், செவிலியர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து டீன் சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பாளையங்கோட்டை ரோடு வழியாக சென்று வ.உ.சி. கல்லூரி அருகே நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உள்ள கூட்ட அரங்கில் செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி ஏற்றனர்.

ஆத்தூர்

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ஆத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கணேஷ், சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நகர பஞ்சாயத்து தலைவர் ஆத்தூரில் செயல்பட்டு வரும் மூன்று தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்று அங்குள்ள செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினார்.


Next Story