தூத்துக்குடி; செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் நிலத்தை மதிப்பீடு செய்ய கால அளவு நீடிப்பு


தூத்துக்குடி;  செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் நிலத்தை மதிப்பீடு செய்ய கால அளவு நீடிப்பு
x

தூத்துக்குடி மாவட்டம் மாதவன்குறிச்சியில் செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் நிலத்தை மதிப்பீடு செய்யும் கால அளவை நீடிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் மாதவன்குறிச்சியில் செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் நிலத்தை மதிப்பீடு செய்யும் கால அளவை நீடிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்காக (இஸ்ரோ) சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைப்பதற்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் அலகு 6-ல் தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 110.96.34 ஹெக்டேர் புன்செய் நிலங்களை கையகப்படுத்துவதற்கும், அதில் நியாயமான இழப்பீட்டை பெறுவதற்கும், அதற்கான அறிவிக்கையை அரசிதழில் சிறப்பு வெளியீடாக வெளியிடுவதற்கும் அனுமதி அளித்து அரசு உத்தரவிடுகிறது.

நில எடுப்புக்கான நில நிர்வாக ஆணையரின் அறிவிக்கை 1-ந் தேதியன்று உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரமாக பிரசுரம் செய்யப்பட்டது. நில எடுப்பு செய்யப்பட வேண்டிய புலங்களுக்கான நில மதிப்பை நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டி பதிவேடு சார் பதிவாளரிடம் இருந்து பெறப்பட்டது. அதில், அலகு 6, தொகுதி 11-ல் உள்ள புல எண்களில் ஒரே புல எண்ணில் உள்ள உட்பிரிவுகளில் ஒன்றுக்கு மட்டும் சதுர மீட்டர் அளவிலும், மற்றவற்றிற்கு ஹெக்டேரிலும் வழிகாட்டி பதிவேட்டில் மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பு வெவ்வேறாக இருப்பதால் அந்த புல எண்ணில் உள்ள நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை ஒரே சீராக நிர்ணயம் செய்ய இயலாது என்றும் எனவே அவற்றுக்கு சரியான நில மதிப்பு நிர்ணயம் செய்து தரப்பட வேண்டும் என்றும் நில நிர்வாக ஆணையர், பதிவுத் துறைத் தலைவரிடம் 2021-ம் ஆண்டு அக்டோபரில் கூறியிருந்தார்.

நிலங்களுக்கான மதிப்பு தீர்வம் ஆணை 31.10.2022 தேதிக்குள் பிறப்பிக்கப்படாவிட்டால் நிலம் கையகப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் காலாவதி ஆகிவிடும் என்றும் கூறியிருந்தார். மேலும், அலகு 6-ன் தொகுதி 11-ல் உள்ள 11.44.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களுக்கு மட்டும் கால அளவை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.அவரது கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து தொகுதி 11-க்கு தீர்வம் பிறப்பிப்பதற்கான காலத்தை 1.11.2022 முதல் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story