தூத்துக்குடி-மதுரைபுதிய ரெயில்பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்கனிமொழி எம்.பி. மனு
தூத்துக்குடி-மதுரை புதிய ரெயில்பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் கனிமொழி எம்.பி. மத்திய ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கைமனு கொடுத்தார்.
தூத்துக்குடி-மதுரை புதிய ரெயில்பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி கூறி உள்ளார்.
மனு
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று முன்தினம் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், தூத்துக்குடி- மதுரை இடையே 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கும் தெற்கு ரெயில்வேயின் முடிவு குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து ரெயில் இயக்க ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் கடந்த 13.07.2023-ல் தெரிவித்து உள்ளது. ஆனால், இதுவரை ரெயில் இயக்கப்படவில்லை.
நடவடிக்கை
இந்த நிலையில் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் கடந்த 24.07.2023-ல் கடிதம் எழுதி உள்ளார். இந்த திட்டத்தில் ஏற்கனவே பல ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் நிதி தேவையை காரணம் காட்டி பணிகளை நிறுத்தி வைக்கும் முடிவு, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மேலும் பல ஆண்டுகள் தாமதத்தை ஏற்படுத்தும். எனவே, தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். மேலும், பணிகளை வேகப்படுத்தி இந்த திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.