தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடக்கிறது


தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடக்கிறது
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

சித்திரை திருவிழா

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 25-ந் தேதி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா நடந்தது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேம், பூஜைகள் நடந்து வந்தன. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வந்தது.

தேரோட்டம்

இன்று (புதன்கிழமை) 10-ம் திருவிழா நடக்கிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் மற்றும் திருத்தேர் பவனி சிறப்பு நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 10 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. சிறிய தேரில் மகா கணபதி, முருகப்பெருமானும், பெரிய தேரிவில் சுவாமி சங்கர ராமேசுவரர், பாகம்பிரியாள் அம்பாளும் ரதவீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு யானை, ஆடும் குதிரைகள் அணிவகுத்து செல்கின்றன. தொடர்ந்து களியல் ஆட்டம், சிவ தொண்டர்களின் சிவகைலாய சிவபூதகண வாத்தியங்கள், மகளிர் கோலாட்டம், தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாடப்படுகிறது. சிலம்பாட்டம், வாண வேடிக்கை, மாணவ, மாணவிகளின் வீர விளையாட்டுக்களும் நடக்கிறது.

தேரோட்டத்தை முன்னிட்டு ரதவீதிகள் அனைத்தும் சுத்தம் செய்தும், சாலைகள் சீரமைக்கப்பட்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story