தூத்துக்குடி சங்கரராேமசுவரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்


தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சங்கரராேமசுவரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

திருக்கல்யாண விழா

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவ விழாவும் ஒன்றாகும். இந்த விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்பாள் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், வெள்ளிமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தன.

தேரோட்டம்

விழாவின் 9-ம் திருநாளான நேற்று காலை 7.35 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 9.30 மணிக்கு பாகம்பிரியாள் திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து 10.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு யானை, குதிரை, சிலம்பாட்டம், வால்சுருள் விளையாட்டு, தப்பாட்டம், கரகாட்டம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பெரிய தேரில் பாகம்பிரியாள் அம்பாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். ரதவீதிகளில் சுற்றி வந்து தேர் நிலையை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, பா.ஜனதா தலைமை செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இன்று தீர்த்தவாரி

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மஞ்சள் இடித்தல், 10 மணிக்கு சுந்தரபாண்டிய விநாயகர் ஆலயத்தில் பாகம்பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி, தீபாராதனை, இரவு 7 மணிக்கு பாகம்பிரியாளம் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு சங்கரராமேசுவரர் ரிஷப வாகனத்தில் பாகம்பிரியாளுக்கு காட்சி தருதல், மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது.


Next Story