தூத்துக்குடி சூப்பிரண்டு அலுவலக போலீஸ் ஏட்டு திடீர் சாவு
தூத்துக்குடி சூப்பிரண்டு அலுவலக போலீஸ் ஏட்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனார்.
கழுகுமலை:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர்துரைப்பாண்டியன்(வயது 44). இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, தூத்துக்குடியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து போனார். அவரது உடலுக்கு கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ், மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ரேவதி (39) என்ற மனைவியும், நிகிலா (15) என்ற மகளும், பாலகுருசாமி (12) என்ற மகனும் உள்ளனர்.