தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாறும்


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்  சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாறும்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிச்சயமாக சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாறும் என்று வ.உ.சி துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிச்சயமாக சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாறும் என்று வ.உ.சி துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறினார்.

பவளவிழா

தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70-வது ஆண்டு பவள விழா தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் ஆனந்த் மொராயிஸ் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன், துணைத்தலைவர் ஜெயந்த் தாமஸ், துணை செயலாளர் சகாயராஜ், பொருளாளர் செலஸ்டின் வில்லவராயர், விழாக் குழு ஆலோசகர்கள் ஜே.பி.ஜோ வில்லவராயர், பி.எஸ்.டி.எஸ்.வேல்சங்கர், ஆர்.எட்வின் சாமுவேல், ஒருங்கிணைப்பாளர் டேவிட்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வ.உ.சி துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பரிமாற்று மையம்

விழாவில் வ.உ.சி துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பேசும் போது, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாற்ற வேண்டும் என்பது தான் அனைவரும் எண்ணமாக உள்ளது. எங்களது அனைத்து திட்டங்களின் மைய புள்ளியும் சரக்குபெட்டக பரிமாற்று மையம் தான். தற்போது உலகில் நிலவும் சூழ்நிலை, இலங்கையில் நிலவும் நிலைமை மற்றும் நமது துறைமுகம் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகிய காரணங்களால் சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக தூத்துக்குடி துறைமுகம் நிச்சயம் மாறும். நமது கனவு விரைவில் நிறைவேறும். இதன் ஒரு பகுதியாக துறைமுகத்தில் வெளித்துறைமுக விரிவாக்க பணிகள் ரூ.7ஆயிரம் கோடியில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு துறைமுகம் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. நடப்பு ஆண்டில் 40 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்படும். ரூ.800 கோடி வருவாய் கிடைக்கும் என நம்புகிறோம். தூத்துக்குடி துறைமுக பகுதியில் திரவ ஹைட்ரஜன், திரவ அமோனியா, பசுமை அமோனியா போன்றவை தயாரிக்கும் நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது போன்ற பணிகள் மூலம் வ.உ.சி. துறைமுகம் சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று கூறினார்.

விழாவில் கப்பல் முகவர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், துறைமுக, விமான நிலைய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story