தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் கடந்த ஆண்டை விட 87 சதவீதம் வளர்ச்சி பெற்று புதிய சாதனையை படைத்து உள்ளதாக, ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் கடந்த ஆண்டை விட 87 சதவீதம் வளர்ச்சி பெற்று புதிய சாதனையை படைத்து உள்ளதாக, ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
38 மில்லியன்
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 38.04 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு உள்ளது. இது முந்தைய நிதியாண்டில் கையாளப்பட்ட 34.12 மில்லியன் டன் சரக்குகளை விட 11.5 சதவீதம் அதிகமாகும். இதில் இறக்குமதி 28.30 மில்லியன் டன்களும், ஏற்றுமதி 8.95 மில்லியன் டன்களும், சரக்கு பரிமாற்றம் மூலம் 0.49 மில்லியன் டன்களும் கையாளப்பட்டு உள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயித்த 36 மில்லியன் டன் சரக்கை தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் கடந்து சாதனை படைத்துள்ளது.
வ.உ.சி துறைமுகத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் மொத்த வருவாய் இதுவரை கண்டிராத வகையில் ரூ.816.17 கோடியாக அதிகரித்து உள்ளது. முந்தைய 2021-2022 நிதியாண்டு மொத்த வருவாய் ரூ.654.52 கோடியாக இருந்தது. இதில் வளர்ச்சி விகிதம் 25 சதவீதம் ஆகும். 2022-2023 நிதியாண்டு இயக்க வருவாய் ரூ.733.27 கோடி ஆகும். வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.256.14 கோடி ஆகும். முந்தைய 2021-2022 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.136.80 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட நிகர வருவாய் 87 சதவீதம் அதிகமாகும். துறைமுக வரலாற்றில் இது புதிய சாதனை ஆகும். இந்த நிதியாண்டில் பல்வேறு பெரிய கப்பல்களில் இருந்து சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. மற்ற துறைமுகங்களை விட தூத்துக்குடி துறைமுகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிலக்கரி, சரக்கு பெட்டகங்கள், ராக்பாஸ்பேட், உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கையாளப்பட்டு உள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 60 நாடுகளுக்கு நேரடியாக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பசுமை துறைமுகம்
வ.உ.சி. துறைமுகத்தில் 2022- 2023-ம் நிதியாண்டில் ரூ.42 கோடியில் சரக்கு பெட்டகங்களை கண்காணிக்கும் வசதி, ரூ.16 கோடியில் நிலக்கரி சேமிப்பு கிடங்கை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மேலும், ரூ.434.17 கோடியில் 9-வது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றுதல், ரூ.16.39 கோடியில் துறைமுக நுழைவு வாயிலை அகலப்படுத்தும் பணி, ரூ.265.15 கோடியில் 3-வது வடக்கு சரக்கு தளத்தை எந்திரமாக்குதல் பணி, ரூ.26 கோடியில் 2 மெகாவாட் காற்றாலை நிறுவுதல், ரூ.16 கோடியில் தரைதள சூரியமின் ஆலை நிறுவுதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. காற்றாலை மற்றும் தரைதள சூரியமின் ஆலை பணிகள் வரும் மே மாதம் முடிவடையும். அப்போது தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் 100 சதவீதம் பசுமை துறைமுகமாக மாறும். துறைமுகத்தின் அனைத்து மின் தேவைகளும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
பேட்டியின்போது, துறைமுக போக்குவரத்து மேலாளர் ஆர்.பிரபாகர், தலைமை எந்திரவியல் பொறியாளர் வி.சுரேஷ் பாபு, நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி ஏ.கே.சாகு, துணை பாதுகாவலர் பிரவின் குமார் சிங், மூத்த துணை தலைமை மருத்துவ அதிகாரி பி.ராஜேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.