தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக சந்திரசேகர் தேர்வு
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட சந்திரசேகர் செவ்வாய்க்கிழமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக க.சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாவட்ட பஞ்சாயத்து
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மறைமுக தேர்தல்களின் போதும், அதன்பிறகும் நடந்த சாதாரண, தற்செயல் மறைமுக தேர்தலின் போதும், குறைவெண் வரம்பின்மை, கோர்ட்டு வழக்கு மற்றம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகிய காரணங்களால் தேர்தல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட பதவியிடங்களுக்கும், இறப்பு, பதவி விலகல் மற்றும் பதவி நீக்கம் காரணமாக 31.7.22 வரை ஏற்பட்டு உள்ள காலி பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது. தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த செல்வக்குமார் பதவி விலகியதால் அந்த பதவி காலியாக இருந்தது. இந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு தேர்தல் நடந்தது.
போட்டியின்றி தேர்வு
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ஜெயசீலி முன்னிலையில் தேர்தல் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 17 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து 7-வது வார்டு உறுப்பினர் க.சந்திரசேகர் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை 2-வது வார்டு மிக்கேல் நவமணி முன்மொழிந்தார். 4-வது வார்டு தங்கமாரியம்மாள் வழி மொழிந்தார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக க.சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வாழ்த்து
இதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் துணைத்தலைவர் சந்திரசேகர் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.