தூத்துக்குடி இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்
தூத்துக்குடி இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
ஆய்வு
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி அமைக்க கடந்த 2014-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேற்கொண்ட நடவடிக்கைகளால் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு பாதை ஒதுக்குவது தொடர்பாக மடத்தூர் பகுதி மக்களுடன் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டம் தொழில்கள் அதிகம் நிறைந்த பகுதி. இங்கு உள்ள தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி வழங்கும் வகையில் ரூ.138 கோடி செலவில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி சிப்காட் வளாகத்தில் மடத்தூர் கிராமம் அருகே அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை இ.எஸ்.ஐ நிர்வாகம் தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக சுற்றுச்சுவர் பணிகள் நடந்து வருகிறது. மருத்துவமனை, உறைவிட மருத்துவர், செவிலியர் குடியிருப்பு போன்றவை அமைக்கப்படுகிறது. ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி திறக்கப்படும்.
கருத்து கேட்பு
இந்த பகுதியில் ஒரு சிவன் கோவில் உள்ளது. மடத்தூர் கிராம மக்கள் பல ஆண்டுகளாக இந்த கோவிலில் வழிபட்டு வருகின்றனர். இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி கட்டும் போது இந்த கோவிலுக்கான இடத்தை எப்படி ஒதுக்கீடு செய்வது, அதற்கான பாதை எப்படி அமைப்பது என்பது தொடர்பாக சில பிரச்சினைகள் இருந்து வந்தன. இது தொடர்பாக கிராம மக்கள், இ.எஸ்.ஐ அதிகாரிகள், சிப்காட் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்ற கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் இந்த கோவிலுக்கு எப்படி வந்து செல்வது, எத்தனை மீட்டர் இடைவெளி விட வேண்டும், பாதைகள் எப்படி அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக சுமூக தீர்வு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து இ.எஸ்.ஐ நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள். கிராம மக்கள் கோவிலில் வழிபட எந்த தடையும் இருக்காது என்று கூறினார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், இ.எஸ்.ஐ. துணை இயக்குனர் கிருஷ்ணகுமார், சிப்காட் திட்ட அலுவலர் லியோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.