தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்: கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உரிமத்தை வருகிற 31-ந்தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீப்பெட்டி தொழிற்சாலை
தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் டிசம்பா் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே உரிய படிவங்களைச் சமர்ப்பித்து உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். தீப்பெட்டி தொழிற்சாலை உரிமதாரர்கள், உரிமம் புதுப்பிக்கும் மனுவுடன் கடந்த 12 மாதங்களுக்குரிய மாத வாரியான தீப்பெட்டி உற்பத்தி, கந்தகம், குளோரைடு வரவு செலவு விவரப்பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பு 30 தினங்களுக்குத் தேவையான ரசாயனப் பொருட்களை ஒரு தடவை அளவுக்கு மிகாமல் இருப்பு வைத்துக் கொண்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம்
2022-ம் ஆண்டுக்கான உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அதற்கான உரிமக் கட்டணத்தைச் செலுத்தி, செலுத்து சீட்டின் அசலினை புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்துடன் இணைத்து 31-12-22-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு ஜனவரி 1 முதல், உரிமக் கட்டணத்துடன் தாமதக் கட்டணம் ரூ.2 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அதோடு, தாமதத்துக்கான தகுந்த விளக்கத்தை உரிமதாரர் தெரிவிப்பது அவசியம். தாமதக் கட்டணத்துடன் மனுச் செய்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.01.2023 ஆகும். அதன் பிறகு எக்காரணத்தைக் கொண்டும் உரிமம் புதுப்பிக்கக் கோரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தில் ரூ.2-க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமம் புதுப்பித்தல் கட்டணம் 5 ஆண்டுகளுக்கு படிவம் 2 மற்றும் 8-க்கு ரூ.5 ஆயிரம், படிவம் 9-க்கு ரூ.10 ஆயிரம் ஆகும். இந்த கட்டணத்தை இணையதளத்தில் இ-செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் உரிய கணக்குத் தலைப்பில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.