தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா நற்கருணை பவனி
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா நற்கருணை பவனி நடந்தது.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் நேற்று நற்கருணை பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
திருவிழா
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தன. 5-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் சிறுவர், சிறுமிகளுக்கு முதல் திருவிருந்தை பிஷப் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு பங்கு மக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலிகள் நடந்தன. காலை 9 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பேராலய உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான சிறப்பு திருப்பலி நடந்தது.
நற்கருணை பவனி
மாலை 6.15 மணிக்கு செபமாலை வழிபாடும், அதைத் தொடர்ந்து பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனியும் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நற்கருணையை பிஷப் ஸ்டீபன் கையிலேந்தி, பெரிய கோயில் தெரு, செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு, விக்டோரியா தெரு, கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பவனியாக எடுத்து வந்தார். தொடர்ந்து பேராலயம் முன்பு உள்ள மைதானத்தில் பிஷப் ஸ்டீபன் தலைமையில் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நடந்தது. நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நற்கருணை பவனியை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
தங்கத் தேர் பவனி
திருவிழாவின் 10-ம் நாளான ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 6.30 மணிக்கு கோவா உயர் மறைமாவட்ட பிஷப், கர்தினால் பிலிப் நேரி தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி 11-ம் திருநாளான ஆகஸ்ட் 5-ம் தேதி காலை நடக்கிறது. அன்று காலை 5.15 மணிக்கு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது. காலை 7 மணிக்கு கோவா உயர் மறைமாவட்ட பிஷப், கர்தினால் பிலிப் நேரி தலைமையில் தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கோவை மறைமாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் தங்கத் தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு இலங்கை மன்னார் மறைமாவட்ட பிஷப் இம்மானுவேல் பர்னாண்டோ தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குத்தந்தை சைமன் ஆல்டஸ் மற்றும் பக்த சபையினர், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.