தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை கோலாகலமாக நடந்தது.
கொடியேற்றம்
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் கொடிபவனி நடந்தது. நேற்று காலையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2-ம் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னையின் கொடி ஆலயத்தை சுற்றி மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் நேர்ச்சையாக வைத்த பால், பழம் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்கினர்.
விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்ற விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து இருந்தனர். இதனால் பீச் ரோட்டில் வாகன போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தேரோட்டம்
மேலும் மதியம் 12 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட பிஷப் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 30-ந் தேதி 5-ம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி, 9 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலியும், 11.30 மணிக்கு மதுரை உயர்மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது. அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந் தேதி 10-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு கோவா உயர் மறைமாவட்ட பிஷப், கர்தினால் பிலிப்நேரி தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 5.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும், 7 மணிக்கு கர்தினால் பிலிப் நேரி தலைமையில் தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து கோவை பிஷப் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இம்மனுவேல் பர்னாண்டோ ஆகியோர் அர்ச்சிப்பு செய்ய, தங்கத் தேர் பவனி நடக்கிறது. மாலை 4 மணிக்கு இலங்கை மன்னார் பிஷப் இம்மானுவேல் பர்னாண்டோ தலைமயில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குதந்தை சைமன் ஆல்டஸ், களப்பணியாளர் ஆல்ட்ரின் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.