தூத்துக்குடிமுத்துநகர் கடற்கரையில் கடற்சார் விளையாட்டுக்கள்
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கடற்சார் விளையாட்டுக்களை கனிமொழி எம்.பி.தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கடற்சார் விளையாட்டுக்களை கனிமொழி எம்.பி நேற்று மாலையில் தொடங்கி வைத்தார்.
கடற்சார் விளையாட்டு
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, தனியார் நிறுவனம் மூலம் பம்பர் சவாரி, பனானா சவாரி, விண்ட்சர்பிங், ஸ்டாண்ட் அப் போர்ட் ஆகிய நான்கு கடற்சார் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை தாங்கி விளையாட்டுக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
படகில் சென்று...
தொடர்ந்து குடும்பத்தினருடன் சவாரி செய்யும் படகில் பள்ளி மாணவர்-மாணவிகளுடன் கனிமொழி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சவாரி சென்றனர். இதே போன்று விழாவில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மற்றொரு படகிலும் சவாரி செய்தனர். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் படகு சவாரி மற்றும் கடற்சார் விளையாட்டுக்களையும் விளையாடி மகிழ்ந்தனர்.