தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்த சிறிது நேரத்தில் மூதாட்டிக்கு உதவித்தொகைக்கான ஆணை
தூத்துக்குடிகலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்த சிறிது நேரத்தில் மூதாட்டிக்கு உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்த சிறிது நேரத்திலேயே மூதாட்டி ஒருவருக்கு உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
மூதாட்டி கோரிக்கை மனு
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த கலெக்டர், வாசலில் மனு கொடுப்பதற்காக மாப்பிள்ளையூரணியை சேர்ந்த மூதாட்டி தங்கம்மாள் என்பவர் அமர்ந்து இருந்தார். அவரிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், உடனடியாக உதவித்தொகைக்கான ஆணை வழங்க உத்தரவிட்டார்.
உதவித்தொகை ஆணை வழங்கல்
அதன்படி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆணையை கலெக்டர், அந்த மூதாட்டியிடம் வழங்கினார். மனுகொடுத்த சிறிது நேரத்தில் உதவித் தொகைக்கான ஆணை கிடைத்ததால், மூதாட்டி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.
மேலும் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக்கில் டீ, காபி, சாம்பார் போன்ற சூடான உணவு பொருட்களை தடை செய்வது குறித்த குறும் படத்தை வெளியிட்டார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபுத்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டிபாய் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.