தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி


தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 10:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

பனிமயமாதா ஆலயம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேரோட்டம், ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தூய பனிமயமாதா பேராலயத்தில் உள்ள மாதா சொரூபத்துக்கு தங்கமூலாம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக மாதாவின் சொரூபம் பீடத்தில் இருந்து நேற்று முன்தினம் இறக்கப்பட்டு சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து திரளான மக்கள் பனிமயமாதாவை நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.

திருப்பலி

நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை தாங்கி திருப்பலிகளை நிறைவேற்றினார். அதன் பின்னர் அவர் தங்கத்தேரை பார்வையிட்டார். இதில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி, பங்குதந்தை குமார்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பனிமயமாதா சொரூபம் தஸ்நேவிஸ் பள்ளிக்கூடத்தில் உள்ள கன்னியர் மடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தங்கமுலாம் பூசும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. அதன்பிறகு தூய பனிமயமாதா சொரூபம் மீண்டும் ஆலயத்தில் உள்ள பீடத்தில் வைக்கப்பட உள்ளது.


Next Story