தூத்துக்குடி 2-வது ரெயில்வே கேட் திடீர் பழுது
தூத்துக்குடி 2-வது ரெயில்வே கேட் திடீர் பழுதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தூத்துக்குடி மாநகரை இரண்டாக பிரிக்கும் வகையில் ரெயில் தண்டவாளம் அமைந்து உள்ளது. இதில் 4 ரெயில்வே கேட்டுகள் உள்ளன.போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 3-வது ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் கடந்த 3-ந் தேதி முதல் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பெரும்பாலான வாகனங்கள், 2 மற்றும் 4-வது ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றன.
நேற்று இரவு 8.15 மணி அளவில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது 2-ம் கேட் மூடப்பட்டது. ரெயில் சென்ற பிறகு கேட்டை திறக்க முயன்றபோது, கேட் பழுதாகி திறக்க முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் கேட்டை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பழுது நீக்கப்பட்ட பிறகு கேட் திறக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்க தொடங்கின.