வனத்துறை பள்ளியில் டி.வி. திருடியவர் கைது


வனத்துறை பள்ளியில் டி.வி. திருடியவர் கைது
x

ஜமுனாமரத்தூர் வனத்துறை பள்ளியில் எல்.இ.டி. டி.வி.க்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் போலீசார் போலீஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் திரும்பி சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த 3 எல்.இ.டி. டி.வி.க்களை கீழே போட்டு விட்டு 2 பேர் காட்டு பாதை வழியாக ஓடினர். மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

இதனையடுத்து தப்பி ஓடிய 2 பேரை தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் துரத்தி சென்று ஒருவரை மடக்கி பிடித்தார். மற்றொரு ஓடிவிட்டார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஜமுனாமரத்தூர் மேல்சிலம்படி கிராமத்தில் உள்ள பலாக்கனூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 22) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மற்றும் தப்பியோடிய 2 பேரும் இணைந்து ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 3 எல்.இ.டி. டி.வி.க்களை திருடியது தெரியவந்தது.

பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடி மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருட்டில் ஈடுபட்டவரை துரத்தி சென்று மடக்கி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் வாழ்த்தி வெகுமதி அளித்து பாராட்டினார்.


Next Story