ஜாமீனில் வெளியே வந்த 2 நாளில் வீடுபுகுந்து இரு சக்கர வாகனங்கள்- செல்போன் திருடிய பிரபல கொள்ளையன் கைது
ஜாமீனில் வெளியே வந்த 2 நாளில் வீடுபுகுந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை திருடிய பிரபல கொள்ளையனை 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பொதுமக்கள் பிடித்தனர்.
கடத்தூர்:
ஜாமீனில் வெளியே வந்த 2 நாளில் வீடுபுகுந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை திருடிய பிரபல கொள்ளையனை 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பொதுமக்கள் பிடித்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டிரைவர்
கோபி வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 40). சரக்கு ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு அவருடைய வீட்டுக்கு மர்ம நபர் வந்து உள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இப்ராகிம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர்.
உடனே மர்ம நபர் ஜன்னல் வழியாக கையை விட்டு வீட்டில் இருந்த இப்ராகிம் மற்றும் அவருடைய மகன், மகள் ஆகியோரின் 3 செல்போன்களை திருடிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றார். அப்போது சத்தம் கேட்டு திடீரென கண் விழித்த இப்ராகிம் குடும்பத்தினர் செல்போன்களை மர்ம நபர் ஒருவர் திருடிக்கொண்டிருந்ததை கண்டனர்.
3 கிலோ மீட்டர் தூரம்...
உடனே அவர்கள் திருடன், திருடன் என சத்தம் போட்டுக்கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்களுடைய சத்தம் கேட்டதும், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தனர்.
உடனே அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மர்ம நபரை விரட்டி சென்றனர். 3 கிலோ மீட்டர் ஓடிய மர்ம நபர் கரட்டூர் அருகே எஸ்.பி. நகரில் உள்ள கரும்பு காட்டுக்குள் புகுந்து கொண்டார். இதைத்தொடர்ந்து கரும்பு காட்டை சுற்றி வளைத்த பொதுமக்கள் விடிய விடிய தேடி அந்த மர்ம நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஸ்கூட்டர்- மொபட் திருட்டு
விசாரணையில், 'அவர் திருச்சி மாவட்டம் சத்திரம் சின்னகவுண்டன்பட்டியை சேர்ந்த முகமது அனிபா என்பவரின் மகன் ராஜா முகமது (27) என்பதும், இப்ராகிமின் வீட்டில் வைத்திருந்த செல்போனை திருடியதும்,' தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், 'கோபி உப்பு கிடங்கு வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). சரக்கு வேன் டிரைவர். இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டுக்கு வந்த ராஜா முகமது அங்கிருந்த ஸ்கூட்டரை நைசாக திருடி உள்ளார். திருடிய ஸ்கூட்டரை கோபி பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் நடந்தே ராஜேந்திரன் வீட்டுக்கு வந்து உள்ளார்.
பின்னர் அங்கிருந்த மொபட்டை திருடிக்கொண்டு வாய்க்கால் ரோடு பகுதிக்கு சென்று உள்ளார். அப்படி வரும்போது இப்ராகிமின் வீட்டுக்கு சென்று செல்போன் திருடிவிட்டு தப்பி ஓடியபோதுதான் பொதுமக்களிடம் வசமாக சிக்கி கொண்டதும்,' தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து ராஜா முகமதுவை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து ஸ்கூட்டர், மொபட் மற்றும் 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே ராஜா முகமது கடந்த ஜனவரி மாதம் கோபி கருமாயாள் வீதியை சேர்ந்த சத்தியாவதி என்பவரது வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து அங்கு இருந்த செல்போன், வெள்ளி கொலுசு மற்றும் அதே நாளில் ராமர் எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்த முகமது ஆதாம் என்பவருடைய வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்னா்தான் ஜாமீனில் ராஜா முகமது வெளியே வந்து உள்ளார். ஜாமீனில் வெளியே வந்த 2 நாளில் மீண்டும் திருட்டில் ஈடுபட்டபோது பொதுமக்களிடம் வசமாக சிக்கி கொண்டார்.
அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்ட ராஜா முகமது மீது கோபி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.