2 வீடுகள் இடிந்தது; கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது


2 வீடுகள் இடிந்தது; கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது
x

2 வீடுகள் இடிந்தது; கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் பகுதியில்பெய்த கன மழை காரணமாக 2 வீடுகள் இடிந்தன. கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது. ஏ.டி.எம். எந்திரத்திற்குள் மழை நீர் புகுந்ததால் பழுதானது.

கன மழை

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணை மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அமராவதி ஆற்றிலும் தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் மழை கொட்டித்தீர்த்தது.

வெள்ளகோவில் பகுதியில் கொட்டித்தீர்த்த கன மழையால் சாலை மற்றும் பள்ளமான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள வரதராஜ பெருமாள் கோவில்களுக்குள் மழை நீர் புகுந்தது.

கச்சேரி வலசு என்ற பகுதியில் முருகன் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. வெள்ளகோவில், கரூர் ரோட்டில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் காம்பவுண்டு சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

ஒரு சில பகுதிகளில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால் நீர் வடிந்த பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

நகராட்சி பணியாளர்கள் நகர் பகுதியில் தேங்கி நின்ற நீரை வாகன மூலம் அப்புறப்படுத்தினர். வெள்ளகோவிலில் கோவை ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியினுள் மழை நீர் புகுந்தது. இதனால் வங்கி வளாகம் சேரும் சகதியானது. அருகில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்திலும் நீர்ப்புகுந்து பழுதானது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் தீபாவளி செலவிற்கு பணம் எடுக்க முடியாமல் வேறு வங்கி ஏ.டி.எம்.க்கு சென்றனர். குறிப்பாக வெள்ளகோவிலில் 111 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதையடுத்து நேற்று காலை நகராட்சி பகுதியில் திருப்பூர் மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் மற்றும் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி மற்றும் அந்தந்தகுதியை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர்.



Next Story