வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
கரூர், நொய்யல் பகுதியில் நடந்த வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் பலி
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெண்ணாடம் ராஜவீதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் வினோத்குமார் (வயது 35). இவர் கரூர் அருகே உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் கொதிகலன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, வினோத்குமார் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
விவசாயி சாவு
நொய்யல் அருகே உள்ள புன்னம் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 50). விவசாயியான இவர், தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு- கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கனகராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கனகராஜின் மகன் சரண்குமார் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.